மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பலரும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றாலும், நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் மருத்துவ படிப்பை தவற விட்டனர். இந்நிலையில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதால், நீட் தேர்விற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி அடையாததற்கு காரணம் கல்வித்தரம் முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழக மாணவர்களுக்கு அனைத்து வித போட்டித் தேர்வுகளையும் எழுதுவதற்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.