இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் விதிகள் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி கூறியுள்ளது.
மோட்டார் வாகன சட்டப்படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என விதிகள் உள்ளன என்றும், அதை அரசு முறையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரியும் சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார். இது குறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 31 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.