திண்டிவனம்: மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தாய் - சேய் உயிரிழப்பு? மக்கள் போராட்டம்!

திண்டிவனம்: மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தாய் - சேய் உயிரிழப்பு? மக்கள் போராட்டம்!
திண்டிவனம்: மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தாய் - சேய் உயிரிழப்பு? மக்கள் போராட்டம்!
Published on

திண்டிவனம் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதனால் பிறந்த குழந்தை மற்றும் அப்பெண் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இவற்றை கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திண்டிவனம் அடுத்த ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். கூலி தொழிலாளி இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சந்தியா மூன்றாவதாக கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவரது கர்ப்பகாலத்தில் அவருக்கு தொடர்ந்து பரிசோதனை செய்து வந்த பிரம்மதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 6-ஆம் தேதி அவரை பிரசவத்துக்கு சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் அவரை அனுப்பி வைத்துள்ளனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சந்தியாவிற்கு அறுவை சிகிச்சை கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் கூறி அவரது கணவரிடத்தில் ஒப்புதல் கையெழுத்து பெற்றுள்ளனர்.

இதையடுத்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சந்தியாவின் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் திண்டிவனத்தில் சிகிச்சை பெற்று வந்த சந்தியாவிற்கு திடீரென உடலில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் மாத்திரை இல்லை எனக் கூறி வெளியில் மாத்திரை மருந்து வாங்கி வர சௌந்தரராஜனிடம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

அப்போதும் சந்தியாவிற்கு உடலில் ஏற்பட்ட பிரச்னைகள் தீராததால் கடந்த பத்தாம் தேதி மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சந்தியாவை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக கடந்த 11-ஆம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அங்கேயும் பல்வகை பரிசோதனைகள் செய்து முடிக்கப்பட்ட பின்பு சந்தியாவிற்கு கல்லீரல், நுரையீரல், கிட்னி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை சந்தியா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் சந்தியாவின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தியாவிற்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் குழந்தையும், தாயும் இறந்ததாகக் கூறி மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரோசனை காவல் நிலையத்தில் சந்தியாவின் உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து சந்தேக மரணத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து சந்தியாவின் உறவினர்கள் கூறும்போது, “சந்தியாவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கவில்லை என்றால் பிரேதத்தை வாங்க மாட்டோம். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விளக்கம் பெற மாவட்ட தாய் சேய் நல அலுவலர் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரை, புதிய தலைமுறை சார்பில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, “திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவிதேஜா தலைமையில் சம்பவம் குறித்து தனி விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com