நீலகிரி மாவட்டத்தில் பிடிபட்ட ரிவால்டோ யானையை எந்தவித முன்னறிவிப்புமின்றி இரவோடு இரவாக லாரியில் ஏற்றி வனப்பகுதிக்குள் விட்டனர்.
நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்டம், மாவநல்லா சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தும்பிக்கையில் காயம் ஏற்பட்டு காட்டு யானை ரிவால்டோ சுற்றி திரிந்ததுகொண்டிருந்தது. இந்த யானை மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டும், இடது கண் பார்வை முற்றிலுமாக இழந்த நிலையில் ஊருக்குள் சுற்றி வந்தது. இந்த யானையை பிடித்து முகாம் கொண்டு சென்று வளர்ப்பு யானையாக மாற்ற வனத்துறை திட்டமிட்டிருந்தது. அதன்படி, கடந்த மே 5ஆம் தேதி, ரிவால்டோ மரக் கூண்டில் அடைக்கப்பட்டது. தொடர்ந்து, வளர்ப்பு யானையாக மாற்றி, முதுமலை முகாம் கொண்டு செல்வதற்கான பணிகளை வனத்துறை மேற்கொண்டு வந்தது. ஆனால், வளர்ப்பு யானையாக மாற்றுவதற்கு வனவிலங்கு ஆர்வலர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில், இது தொடர்பாக முடிவு செய்வதற்காக 8 பேர் கொண்ட குழுவை வனத்துறை அமைத்தது. 8 பேர் கொண்ட குழுவும் இணைந்து, யானையை வனப்பகுதிக்குள் விட பரிந்துரை செய்தனர். அதன்படி, நேற்று ஒரு நாள் முழுவதும் வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் 8 பேர் குழு உறுப்பினர்களிடையே நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது.
இதனிடையே 2 ஏக்கர் வனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு, அதற்குள் யானையை விட்டு, கண்காணிக்கப்படும் என வனத்துறை தெரிவித்திருந்தது. ஆனால், குழுவின் ஆலோசனைக்குப் பின், திடீரென நேற்றிரவு யானையை லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதியில் உள்ள சிக்கல்லாவில் கொண்டு விட்டனர். எந்தவித முன்னறிவிப்புமின்றி, யானையை வனப்பகுதிக்குள் விட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.