பெண் காவலர்களுக்கு பணியின் போது தங்களுக்கு ஏற்படும் குறைகளைத் தெரிவிக்க குறைதீர்க்கும் மனுப்பெட்டி வசதி என்ற திட்டத்தை சென்னை காவல்துறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் பாதுகாப்பு பணி, வாகன தணிக்கை, ரோந்து போன்ற பல பணிகளில் காவல்துறையினருடன் இணைந்து ஆயுதப்படை காவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில் 2 ஆயிரத்து 198 பெண் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பெண் காவலர்களுக்கு சக காவலர்களால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் அதனைத் தெரியப்படுத்த குறைதீர்க்கும் மனுப்பெட்டி வசதியை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிமுகப்படுத்தினார்.
போக்குவரத்து கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் புகார் மனுக்கள் பெறப்பட்டு ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு பெட்டியானது எழும்பூர் ஆயுதப்படை துணை ஆணையர் அலுவலகம், மவுண்ட் ஆயுதப்படை அலுவலகம் உட்பட 5 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுப்பெட்டி வசதியை இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். மேலும் ஆயுதப்படை காவலர்கள் பயன்படும் வகையில் ரூ. 4.8 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இவைத்தவிர பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி இறந்த ஆயுதப்படை தலைமை காவலர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு ஆயுதப்படை காவலர்கள் மூலம் திரட்டப்பட்ட 2 அரை லட்சம் ரூபாய் தொகையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மேடையில் பேசுகையில், "சென்னை காவல்துறை எல்லா சூழ்நிலைகளிலும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து வருகிறது. சென்னை காவல்துறையில் ஆயுதப்படையினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அவர்களின் நலன் காக்கும் பொருட்டு அவர்களின் பயன்பாட்டிற்காக இந்த குடிநீர் சுத்திகரிப்பு மையம் சென்னை காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படையைச் சேர்ந்த பெண் ஆளிநர்கள் பணியின்போது சந்திக்கும், குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இந்த மனுப் பெட்டிகளின் மூலம் தெரிவிக்கலாம் . அந்த புகார்களை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான குழு விசாரித்து ஒரு வாரத்திற்குள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்" என்று காவல் ஆணையர் பேசினார்.
நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் தலைமையிட கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி, போக்குவரத்து கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, தலைமையிடம் இணை ஆணையர் மல்லிகா, திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன், நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் விமலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, ஆயுதப்படை பிரிவு துணை ஆணையர் சௌந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.