``ஒருதலைப் பட்சமான செயல்பாடுகள்; பதவியில் நீடிக்க ஆளுநர் தகுதியற்றவர்``-ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம்

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசுத் தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 பக்கம் கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டாலின், ரவி
ஸ்டாலின், ரவிட்விட்டர்
Published on

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவிtwitter

அதில், “ஒருதலைப் பட்சமான செயல்பாடுகள் மூலம் ஆளுநர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். வகுப்புவாத வெறுப்பை தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் ஆளுநர். மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பை தேடும் ஆளுநரை ஒன்றிய முகவராகவே கருத முடியும். தனது நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியைச் சிறுமைப்படுத்தியுள்ளார். அமைச்சரை நீக்குவது தொடர்பான ஆளுநரின் பரிந்துரை சட்ட விரோதமானது; அரசியலமைப்பை மீறிச் செயல்பட்டு வருகிறார்.

குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்கிறார். சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் ரவி காலதாமதம் செய்கிறார். தேவையற்ற அறிக்கைகள், பேச்சுகள் மூலம் தமிழ் மக்களின் உணர்வு, பெருமையை ஆளுநர் புண்படுத்தியுள்ளார்.

திராவிட அரசியல் பிற்போக்குதனமானது என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமின்றி அறியாமையும்கூட. குழந்தை திருமணம் போன்ற கொடிய குற்றம்செய்தவர்களைக் காப்பாற்றும் வகையில் கருத்து தெரிவிப்பதை மனசாட்சியுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவுசெய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்கோப்புப்படம்

தமிழ்நாட்டில் திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று சொல்பவர்களின், பார்வையில்தான் குறைபாடு உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை 'தமிழகம்' என்று பெயர் மாற்றம் செய்ய முயன்றார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளைக் கவிழ்க்கும் வாய்ப்புகளை ஆளுநர்கள் தேடுகின்றனர். ஆளுநர் பதவியேற்கும்போது எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ரவி மீறியுள்ளார்” என அதில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எழுதிய இக்கடிதம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ஆளுநர் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளது பாராட்டுதலுக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “முதலமைச்சரின் கடிதம் திசை திருப்பும் செயலாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com