சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான என்.சங்கரய்யா 101 வது பிறந்த நாளில் அடி எடுத்து வைக்கிறார். போராட்டம், சிறை வாழ்க்கை பயணித்த அவர் இன்றளவும் மக்கள் பிரச்னை குறித்து பேசி வருகிறார்
இடதுசாரி இயக்கத்தில் என்.எஸ் என்று அன்போடு அழைக்கப்படுபவர், கோவில்பட்டி நரசிம்மலு - ராமானுஜம் தம்பதியருக்கு மகனாக பிறந்த சங்கரய்யா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்து சுந்திர போராட்டத்திற்காக கூட்டத்தை நடத்திய இவர், 1938 ம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் போராட்ட பயணத்தை தொடங்கினார்.
பின்னர் 1939 ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார். இதற்காக அவர் முன்னெடுத்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டம், பின் 1941 ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியும், மொழிவாரி மாநிலமாக பிரித்தபோது தமிழகத்திற்கு குரல் கொடுத்தவர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் 1943 ல் மதுரை மாவட்ட கம்யூனிஸ்ட் செயலாளராக பொறுப்பேற்று, பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்து தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண போராட்டம், ஆலை தொழிலாளர்களின் எண்ணற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். கொள்கை பிடிப்புடன் சாதி மறுப்பு திருமணம் மேடையில் மட்டும் பேசாமல் தன்னுடைய குடும்பத்திலேயே நடத்தினார்.
1997 ல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடும், 1998 ல் மத நல்லிணக்க பேரணியை கோவையில் நடத்தினார். தன்னுடைய வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கையும், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவர் 3 முறை மதுரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கிராமங்களில் ரேசன் கடை அமைப்பது குறித்தும், சுயமரியாதை திருமணம் நிறைய நடப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
சிறை வாழ்க்கையில் முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் குடியரசு தலைவர் வெங்கட்ராமன் உடன் நட்பு கொண்டவராக இருந்தார். அதேபோல் சென்னை மாகாணத்தின் முதல்வர் ராஜாஜி, தமிழ்நாட்டின் முதல்வர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைத்து தலைவர்களிடம் நெருக்கம் கொண்டவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் உடன் நெருக்கமாக இருந்தாலும் மக்கள் பிரச்சனைக்காகவே பேசி இருக்கிறார்.
வயது மூப்பின் காரணமாக தற்போது வீட்டில் இருந்தாலும் தமிழகத்தின் பெருமை கீழடியை பாதுகாக்க வேண்டும் என்றும், மதச்சார்பின்மை பாதுகாத்தல், இந்திய நாட்டின் ஒற்றுமை, மாணவர்கள், இளைஞர்கள் தேசத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் சங்கரய்யா. நம் காலத்தில் வாழும், வாழும் வரலாறு சங்கரய்யாவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- செய்தியாளர் சே.ராஜ்குமார்