விருதுநகரில், மது அருந்திவிட்டு கல்லூரிக்குச் சென்ற 8 மாணவர்கள், உயர்நீதிமன்ற கிளை உத்தரவையொட்டி காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் வகுப்பறைக்கு மது அருந்தி வந்துள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை அனுமதிக்கவில்லை. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களிடம் கல்வி கட்டணத்தை வாங்கிக் கொண்டு கல்லூரிகளில் அனுமதிக்க நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், தவறை செய்த மாணவர்கள், காமராஜர் நினைவு இல்லத்தை காலை 10 முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும் என்றும், மது விழிப்புணர்வு குறித்த பதாதைகளை ஏந்தி பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளுமாறும் வினோதமான உத்தரவை பிறப்பித்தார்.
நீதிபதி உத்தரவின்படி, காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். மாணவர்களை கண்காணிக்க காவல் ஆய்வாளர், கல்லூரியின் உதவி பேராசிரியர் உள்ளிட்டோர் அங்கு இருந்தனர்.