செய்தியாளர்: கோகுல்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் பாலாஜி. இவரது மகன் டெல்லி பாபு (எ) விக்கி (19). சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி விக்கி, தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில், சோமங்கலம், எருமையூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி போட்டோஷூட் செய்தும், ரீல்ஸ் எடுத்தும் வந்துள்ளார்.
அப்போது பூந்தமல்லியைச் சேர்ந்த தேஜாஸ் (18), என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், விக்கியின் பைக் மீது மோதியுள்ளது. இதில், தூக்கி வீசப்பட்ட விக்கி, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.