வடபாதிமங்கலம் அருகே இருசக்கர வாகனம்மீது டிராக்டர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் திருவாரூர் அரசு கலைக் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் சுபா, திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இதழியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இதேபோன்று வடவேற்குடி கிராமத்தைச் சேர்ந்த தட்சிணமூர்த்தி மகள் ஜெனித்தா என்பவரும் திருவிக அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை பட்டப்படிப்பு படித்து வருகிறார். நெருக்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது ஊட்டியாணி என்கிற இடத்தில் செங்கல் ஏற்றிவந்த லாரி ஒன்று, இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த சுபா என்கிற கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மற்றொரு மாணவியான ஜெனித்தாவை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் குறித்து அறிந்த கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிய தொடங்கினர். அதனையடுத்து திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவித்தது.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் பாலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தப்பியோடிய நிலையில் வடபாதிமங்கலம் காவல்துறையினர் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டரின் உரிமையாளர் பிரபாகர் என்பவரை கைதுசெய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக மாணவ மாணவிகளிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.