விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உர பதுக்கல் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடந்துவருகிறது. அதில் இன்றைய தினம் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165 டன் உரம் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த உர மூட்டைகளை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக உர கிடங்குகளில் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த ஆய்வில் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள நான்கு நிறுவனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கைப்பற்றப்பட்ட 100 டன் யூரியா 65 டன் கலப்பு உரங்களை வேளாண்மைத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.
இதுதொடர்பாக வேளாண் இணை இயக்குனர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கின்ற போது, “தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கலப்பு உரங்கள் மற்றும் யூரியா போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது விக்கிரவாண்டி பகுதியில் 4 நிறுவனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த கலப்பு உரங்களில் யூரியா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கோலியனூர் பகுதியில் 19 டன் உரிய ஆவணம் இன்றி கலப்பட உரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு மேற்கொள்கிறோம்” என்றார். மேலும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.