அழுது கொண்டே மனு அளித்த மாற்றுத்திறனாளி மாணவர்... ஆதரவுக்கரம் நீட்டிய ஆட்சியர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள ஈயனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பூமாலை என்பவருடைய மகன் கார்த்திகேயன் (15). இவர், எஸ்.ஒகையூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் கார்த்திகேயன், உடல் வளர்ச்சி குன்றிய நிலையில் சுமார் மூன்றரை அடி உயரம் மட்டுமே உள்ளார். இதனால் பள்ளிக்கூடம் சென்றுவரக்கூட அவருக்கு துணை தேவைப்படுகிறது.
தற்போது அவரது பெற்றோரில் யாரேனும் ஒருவர் உடன் சென்று வருகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவரான கார்த்திகேயன், தான் பள்ளிக்குச் சென்று வர தனக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அழுது கொண்டே மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். சிறுவன் மனு அளிக்க வந்திருப்பதை கண்ட மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் சிறுவனிடம் அமர்ந்து அவருடைய கோரிக்கைகள் என்னவென்று கேட்டறிந்தார்.
அப்போது சிறுவன் கார்த்திகேயன், தான் பள்ளிக்கூடம் சென்று வர தனக்கு ஸ்கூட்டர் வேண்டும் என்றார். சிறுவன் கூறுவதை கூர்ந்து கவனித்த மாவட்ட ஆட்சியர், பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இயக்குகின்ற அளவிற்கு சிறுவனின் உடல் திறன் இல்லாவிட்டாலும் சிறுவனுக்கு பள்ளிக்கூடம் சென்று வர மாற்று வாகனம் ஏதாவது ஏற்பாடு செய்து அளிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து கார்த்திகேயன் பள்ளிக்கூடம் சென்று வர மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவில் ஏதாவது ஒரு உதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.