மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் பாம்பு பிடிவீரர் காஜா மைதீன். இவர், பள்ளிவாசலில் பணியாற்றி வரும் நிலையில், மற்ற நேரங்களில் வனத்துறை அறிவுறுத்தலின் பேரில் குடியிருப்புக்குள் புகும் பாம்புகளை பிடிக்கும் பணியை செய்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமுகையில் சினிமா தியேட்டர் அருகே மினி லாரியில் பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாக காஜா மைதீனுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று பாம்பை பிடிக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு அவரை இரண்டு முறை கடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் காஜா மைதீன் உடலில் விஷம் ஏறிய நிலையில், அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் காஜா மைதீனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற காஜா மைதீன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரை பொருட்படுத்தாமல் பாம்பு பிடிப்பதை ஒரு சமூக சேவையாக செய்துவந்த பாம்புபிடி வீரர் காஜா மைதீன், பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.