கோவை பெட்ரோல் குண்டுவீச்சு எதிரோலி: உஷார் நிலையில் தமிழகத்தின் ரயில் நிலையங்கள்!

கோவை பெட்ரோல் குண்டுவீச்சு எதிரோலி: உஷார் நிலையில் தமிழகத்தின் ரயில் நிலையங்கள்!
கோவை பெட்ரோல் குண்டுவீச்சு எதிரோலி: உஷார் நிலையில் தமிழகத்தின் ரயில் நிலையங்கள்!
Published on

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக அசாம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவை நகர் பகுதி மற்றும் புற நகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அலுவலகங்களில் என தொடர்ச்சியாக 7 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் கோவை மாநகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளுக்கு வரும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி, ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகளை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

சந்தேக நபர்கள் ரயில் நிலையங்களில் வலம் வருகிறார்களா என்பதையும் சிசிடிவி பதிவுகள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரயில்வே எஸ்.பி அதிவீர பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வே எஸ்.பி அதிவீர பாண்டியன், “ரயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து அவர்களின் உடமைகளை தொடர்ந்து ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் பெட்டிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் உள்ளதா என்பதை கண்டறிய மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல சென்னை, திருச்சி, மதுரை, கோவை, விருதுநகர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் 356 ரயில்வே போலீசாரும், சென்னை மாவட்டத்தில் 410 ரயில்வே போலீசாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் செயல்களுக்கு ஏற்ப அவரவர் தலையெழுத்துகளை அவரவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்” எனவும் அவர் எச்சரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com