கோவை: வேலையும் இல்லை வருமானமும் இல்லை... குறுந்தொழில் செய்தவர் எடுத்த விபரீத முடிவு
கொரோனாவை தொடர்ந்து மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் வேலை இல்லாததால் மன உளைச்சலில் இருந்த குறுந்தொழில் முனைவோர், தனது லேத் தொழிற்கூடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்து வந்தவர் யேசுராஜ். இவருக்கு சுகுணாதேவி என்ற மனைவியும், ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 29ஆண்டுகளாக லேத் பட்டறையில் பணியாற்றி வந்த இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு இருகூர் பகுதியில் சொந்தமாக லேத் ஒர்க்ஷாப் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சொந்தமாக தொழில் துவங்கிய 2 மாதங்களிலேயே கொரோனா பொதுமுடக்கம் வரவே, தொழில் முடங்கியது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அரசு கொண்டவந்த தளர்வுகளால் மீண்டும் தொழிலை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் மூலப்பொருட்களின் விலை உயர்வு மிகப்பெரிய இழப்பை தந்துள்ளது.
இதனால் முற்றிலும் வேலை இல்லாமல் வருமானமின்றி இருந்தவர் வீட்டு செலவுக்கும், பிள்ளைகளின் கல்லூரி படிப்புக்கான செலவுக்கும் செய்வதறியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி ஒர்க்ஷாப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது 29 ஆண்டுகால பணியின் சேமிப்பையும், வீட்டில் இருந்த நகைகளையும் அடமானம் வைத்து இந்நிறுவனம் துவங்க முதலீடு செய்துள்ளதாகவும், வேலையும், வருமானமும் இல்லாமல் கடன் பெரும் சுமையாக வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாக கூறும் யேசுராஜின் மனைவி, ஒருவர் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த தங்களுக்கு தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.