கோவை மாநகர திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று கோவை மாநகர ஆணையரிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார் அவர். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவர் மீது தொடர்ச்சியான புகார்கள் எழுந்த நிலையில், தலைமை அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது...பதவி விலகலின் பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளிலும் வெற்றிவாகை சூடியது தி.மு.க கூட்டணி. கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் மேயர் தவிர்த்து, மற்ற 20 மாநகராட்சிகளிலும் தி.மு.கவினர்தான் மேயர் பதவி வகிக்கிறார்கள். உள்ளாட்சியில் பெண்களுக்கு ஐம்பது சதவிகித இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 11 பெண் மேயர்கள் இருக்கிறார்கள்...அவர்களில், கோவையைச் சேர்ந்த மேயர் கல்பனாவும் ஒருவர்...முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிபாரிசில் மேயரானவர் என்று சொல்லப்படுவதுண்டு...இந்த நிலையில், அவர் இன்று தனது மேயர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கான பின்னணி என்வென்று கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தோம்.
ஆரம்பம் முதலே மேயர் கல்பனாவுக்கும் கோவை மாநகர திமுக நிர்வாகிகளுக்கும் இடையே ஒத்துப் போகவே இல்லை. காரணம், கோவையில் மேயர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என பல சீனியர் புள்ளிகள், அதிகாரமிக்கவர்கள் முட்டி மோதினார்கள். ஆனால், அமைச்சர் செந்தில்பாலாஜி, மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்கள் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக எளிய பின்புலத்தில் இருந்து வந்த கல்பனாவுக்கு மேயர் பதவியை பெற்றுத் தந்தார். ஆனால், செந்தில் பாலாஜியின் கணிப்புமே பொய்யாகிப் போனது. நாட்கள் செல்லச் செல்ல, கல்பனாவின் கணவர் ஆனந்த குமாரின் தலையிடல் மாநகராட்சியில் அதிகமானது.
செந்தில் பாலாஜியின் ஆதரவோடுதான் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சொந்தக் கட்சி நிர்வாகிகளுடன் தகராறு, மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பஞ்சாயத்து. பக்கத்து வீட்டில் லடாய் என அவரின் மீதான அதிருப்தி பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுக் கொண்டே போனது... தவிர, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேருவுக்கும், மேயருக்கும் ஆரம்பத்தில் இருந்து ஏழாம் பொருத்தம்தான். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவில் தப்பித்து வந்தவர், தற்போது அவரே சிறையில் இருக்கும் நிலையில் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் நெருக்கடிக்கு ஆளானார்.
அதே வேளையில், நாடாளுமன்றத் தேர்தலும் வர, கோவை மாநகரத்துக்கு உட்பட்ட தொகுதிகளில், பாஜக வழக்கத்தை விட அதிகமான வாக்குகளைப் பெற மேலும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் கல்பனா. பதவியை விட்டு நீக்கினால் நன்றாக இருக்காது என்பதால், திமுக தலைமையின் அறிவுறுத்தலில் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்திருக்கிறார். தலைமையின் இந்த முடிவு 2026 தேர்தலையும் மனதில் வைத்துதான். அந்த வகையில், மேயர் மாற்றம் கோவையோடு நிற்காது, திருநெல்வேலி தொடங்கி தாம்பரம் வரை பல மாநகராட்சியில் மேயர் மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.
இந்நிலையில், கோவையை தொடர்ந்து நெல்லை மாநகர மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோவை மற்றும் நெல்லை மேயர்கள் மீதான புகார்களை விசாரித்து அமைச்சர் கேஎன்.நேரு, திமுக மேலிடத்திற்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கோவை, நெல்லை மாநகராட்சி மேயர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.