கோவையில் பொங்கல் பொருட்கள் வாங்கச் சென்றபோது பெண் போலீஸ் தொலைத்த 2 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருபவர் கவிதா தேவி. இவர் கடந்த 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று குடும்பத்தோடு கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இ கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பீளமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஷாம் எட்வர்ட் (42) என்பவர் 2 பவுன் தங்க நகை, சாலையில் கிடந்ததாக காட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போது அந்த நகை பெண் காவலர் கவிதா தேவியின் நகை என்பது தெரியவந்தது.
இதையடுத்து உதவி கமிஷனர் வின்சன்ட், நகையை மீட்ட சுரேஷ் சாம் எட்வர்டை அழைத்து பாராட்டினார். மேலும் நகையை கண்டெடுத்த சுரேஷ் சாம் எட்வர்டு கையாலேயே நகையை தொலைத்த கவிதா தேவிக்கு அந்த நகையை கொடுக்கச் செய்தார். தொடர்ந்து போலீசார் உட்பட பலரும் எட்வர்டை பாராட்டினர்.