கோவை தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை இணைச் செயலாளராக இருப்பவர் பைசல். இவருடைய மனைவி அம்பராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அம்பராம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் தனது மினி ஆட்டோவை தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் சகர்பானுவின் கணவர் பைசல் "யாருடா பஞ்சாயத்துத் தலைவர் என்ன கேட்காமல் இங்கு வண்டியை நிறுத்தினது" என்று தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. அத்துடன் ஆட்டோவில் நான்கு சக்கரங்களிலும் இருந்த காற்றைப் பிடுங்கி விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு வந்த இளையராஜா "எதற்காக வண்டியில் காற்றைத் திறந்து விட்டீர்கள்" எனக் கேட்டுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த பைசல் அவரை தகாத வார்த்தைகள் திட்டி பலமாகத் தாக்கி நெஞ்சு பகுதியில் கடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சை அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இளையராஜா ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலை மிரட்டல் விடுத்தல், பொது இடத்தில் வைத்துத் தாக்கி காயப்படுத்தியது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பைசலை கைது செய்து பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைத்தனர்.