கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரது கட்டடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த மார்ச் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது சகோதரருக்கு தொழில் ரீதியாக நெருக்கமான ஜே.ஆர்.டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் கோவை புதூர் பகுதியில் ராஜேந்திரனின் ஜே.ஆர்.டி. ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டியுள்ள வீடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தலைமையில் சென்ற அதிகாரிகள், அந்நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் வீடுகள், உரிய அனுமதி பெற்று முறையாக கட்டப்பட்டு இருக்கின்றதா, அனுமதி பெற்ற அளவு மற்றும் மாநகராட்சியிடம் பெறப்பட்ட அனுமதிப்படியே கட்டடங்களை கட்டி வருகிறார்களா என்பது குறித்து நில அளவை அதிகாரிகளுடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஜே.ஆர்.டி நிறுவனத்தில் கட்டப்படும் வீடுகளில் வீதி மீறல் உள்ளதாக எழுந்த புகார் அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.