கோவையை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் பல்வேறு சர்வதேச வீரர்களை பின்னுக்குத் தள்ளி, டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து சாதித்து உள்ளனர். கோவையை அடுத்த நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் அஷ்வின், கைலாஷ், மற்றும் தரணி ஆகிய மூன்று பள்ளி மாணவர்கள் குதிரையேற்ற பயிற்சி பெற்று வருகின்றனர். சிறு வயதிலேயே குதிரையேற்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் இருந்ததன் காரணமாக சொந்தமாகவே குதிரையை வாங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதலில் தென்னிந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பிறகு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்று உள்ளனர்.
முதல் முதலாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் இந்த மூன்று மாணவர்களும் பங்குபெற்று உள்ளனர். அந்த போட்டியில் மூன்று மாணவர்களும் ஆறு , ஏழு ஆகிய இடங்களைப் பெற்று, சர்வதேச வீரர்களை பின்னுக்குத் தள்ளி டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து புதிய சாதனையை படைத்து உள்ளனர். குதிரையேற்ற விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் அதிகளவில் பிரபலம் இல்லாததற்கு மக்களிடையே இருக்கும் அச்சம் மட்டுமே காரணம் எனக் கூறும் வீரர்கள், குதிரையுடன் அன்போடும் அரவணைப்போடும் பழகினால் இந்த போட்டியில் சாதிக்க முடியும் என கூறுகின்றனர்.
குதிரையேற்றப் போட்டி குறித்து தற்போதும் அதிகளவில் விழிப்புணர்வு இல்லாத சூழலே இருப்பதாகவும், இருப்பினும் இந்த விளையாட்டின் மூலமாக மனிதர்களுக்கு பல்வேறு நற்பண்புகளை வளர்க்கும் வகையில் இருப்பதால் இந்த விளையாட்டை விளையாட அனைவரும் முன் வர வேண்டும் என கூறுகிறார் குதிரையேற்ற விளையாட்டின் பயிற்சியாளர் சரவணன்.
குதிரையேற்ற விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு மனிதர்களிடமும் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் இருப்பதாகவும், இந்த விளையாட்டு மன ரீதியான மாற்றத்தையும் கொண்டு வரும் எனவும் உறுதியுடன் கூறுகின்றனர். இவர்களை போன்ற சிறுவர்களின் சாதனைகள் இந்த விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.