கோவை: மருந்து குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பலகோடி மதிப்புள்ள மருந்துகள் எரிந்து சேதம்

கோவை: மருந்து குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பலகோடி மதிப்புள்ள மருந்துகள் எரிந்து சேதம்
கோவை: மருந்து குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பலகோடி மதிப்புள்ள மருந்துகள் எரிந்து சேதம்
Published on

கோவையில் தனியார் மருந்துக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் எரிந்து நாசமானது.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே பிரபல பார்மஸியின் மருந்துக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் மருந்துகள் மொத்தமாக இருப்பு வைக்கப்பட்டு திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான மருந்துக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில், இன்று அதிகாலை மெடிக்கல் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடோன் காவலாளிகள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


தகவல் அறிந்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திலிருந்து 3-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் விரைந்து சென்றனர். அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராததால் அருகே உள்ள தனியார் வாட்டர் சர்வீசில் இருந்தும் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுமார் 6 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.


இதில் குடோன் சேதமடைந்ததுடன் பெட்டி, பெட்டியாக வைக்கப்பட்டிருந்த சாதாரண மருந்துகள் முதல் உயிர் காக்கும் மருந்துகள் வரை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் சேதமதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என தெரியவந்துள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடைபெற்றதா? அல்லது நாச வேலை காரணாமா? என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com