கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு, இதுவரை 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 4 மாதங்களுக்குள் நில எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு விமான நிலைய விரிவாக்க பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக, 624 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதில், 461 ஏக்கர் பட்டா நிலம், 28 ஏக்கர் அரசு புறம்போக்கு, 135 ஏக்கர் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான நிலம் ஆகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்தப் பணி, தமிழக அரசு 1,132 கோடி ரூபாய் விடுவித்ததை தொடர்ந்து, வேகம் பிடித்துள்ளது. இதுவரை, 300 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு, 750 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது.
மீதமுள்ள 161 ஏக்கர் பட்டா நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. நில உரிமையாளர்களின் ஆவணங்களை சரி பார்க்கும் அலுவலர்கள், சர்வேயர்களை கொண்டு நிலத்தை அளந்து சரி பார்க்கின்றனர். நிலம், சம்பந்தப்பட்ட உரிமையாளர் சுவாதீனத்தில் இருந்து, அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்யப்படுகிறது.
இழப்பீடு தொகையும் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. வில்லங்கம் இருக்கும் சொத்து, வாரிசுரிமை போட்டி இருக்கும் சொத்துகள், உரிமையாளரை கண்டறிய முடியாத சொத்துக்கள் ஆகியவற்றை, ஆர்ஜிதம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சொத்துகளை உரிமை கோரி வருபவர்களிடம், என்னென்ன சான்றுகளை கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை விமான நிலைய விரிவாக்கப்பணி (நிலம் எடுப்பு) சிறப்பு டி.ஆர்.ஓ., மீனாட்சி சுந்தரத்திடம் கேட்டபோது, மாதம் 100 கோடி ரூபாய்க்கு கிரையம் பெற, இலக்கு நிர்ணயித்து பணிகள் முழு வீச்சில் நடப்பதாகவும், தாசில்தார் மூன்று பேர், போதிய எண்ணிக்கையில் சர்வேயர்கள், வருவாய் ஆய்வாளர்கள், பிற அலுவலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 3 முதல் 4 மாதங்களில் நில எடுப்பு பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.