கோவை பேரூர் பச்சாபாளையம் அருகே குடியிருப்பு பகுதியை ஒட்டிய சோளக்காட்டுக்குள் ஏழு காட்டு யானைகள் முகாமிட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பேரூர் பகுதியும் ஒன்று. இப்பகுதிகளில் அவ்வப்போது யானைகள் உலா வருவதும், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் நுழைவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பச்சாபாளையம் அருகே உள்ள சோளக் காட்டுக்குள் ஏழு காட்டு யானைகள் நுழைந்தன. இதையடுத்து யானைகள் மீண்டும் காட்டிற்குள் செல்லாமல் சோளக் காட்டிற்குள்ளேயே முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதையடுத்து யானைகளை விரட்ட வனத் துறையினர் சோளக்காடு அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து வனத்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து யானைகளை காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் நேரம் என்பதால் காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதியில் உள்ள பகுதிக்குள் நுழைந்து விடும் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் யானைகள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிக்குள் நுழைந்திடாத வகையில் தொடர்ந்து யானைகளை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.