செய்தியாளர்: பிரவீண்
அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் ரயில் பாதை:
கோவை மாவட்டம், போத்தனூர் முதல் கேரள மாநிலம் பாலக்காடு வரையிலான ரயில்வே வழித்தடத்தில், மதுக்கரை முதல் வாளையாறு வரை உள்ள ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. கோவையில் இருந்து செல்லும் பாதை ஏ லைன் எனவும் கேரளாவில் இருந்து வரும் பாதை பி லைன் எனவும் அழைக்கப்படுகிறது. வனப்பகுதி வழியாக ரயில்கள் செல்லும்போது 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இரவு நேரங்களில் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது.
20 ஆண்டுகளில் 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது:
இதனால், அடிக்கடி தண்டவாளத்தை கடக்கும் யானைகள் மீது ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது. பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் ரயில் பாதையில் யானைகள் அதிகமாக தண்டவாளத்தை கடக்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் யானைகள் ரயில் பாதையை கடக்கும் வகையில் இரண்டு இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக வனப் பகுதியான மதுக்கரை வனச்சரகத்தில் ஏ.ஐ எனப்படும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தண்டவாளத்தை கடக்க முயன்று உயிரிழந்த பெண் யானை:
இந்நிலையில், இன்று அதிகாலை கேரள மாநிலம் வாளையாறு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் அருகே பெண் யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில், யானை மீது மோதியுள்ளது. இதில், தலையில் பலத்த காயமடைந்த யானை, அங்கிருந்து அருகில் உள்ள நீரோடைக்குச் சென்று உயிருக்குப் போராடியது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில், யானை பரிதாபமாக உயிரிழந்தது.
சூழலியல் ஆர்வலர்கள் சொல்வதென்ன?:
இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளில் பாலக்காடு - மதுக்கரை இடையே ரயிலில் அடிபட்டு 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் ரயில் பாதையை இரவு நேரங்களில் கடக்கும் போது அதி வேகமாக வரும் ரயில்கள் மோதுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ள நிலையில் ஒருசில ரயில் ஓட்டுநர்கள் இதனை கடைபிடிக்காததால், இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு இடங்களில் யானைகள் ரயில் பாதையை கடக்கும் வகையில் உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளது அதுபோக ஏ.ஐ எனப்படும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு யானைகளில் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதே போல் கேரள வனப்பகுதிக்குள் யானைகள் கடக்கும் பகுதிகளை கண்டறிந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.