கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நாகராஜபுரம் பகுதியில் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் காம்பவுண்ட் சுவர் கட்டும் பணிக்காக தரையில் பள்ளம் தோண்டி தற்காலிக தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர்.
இப்பள்ளிக்கு அருகில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் கார்த்தி என்பவரது மகன் குகன்ராஜ் என்ற 6 வயது சிறுவன், விளையாடுவதற்காக நேற்று மாலை பள்ளிக்குள் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாக வீடு திரும்பவில்லை என தெரிகிறது.
இதையடுத்து சிறுவனை பெற்றோர் தேடியபோது, பள்ளிக்குள் இருந்து தண்ணீர் தொட்டியில் சிறுவன் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளியில் கட்டட வேலை செய்துவரும் வடமாநில தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டியை சரிவர மூடாததால் தான் சிறுவன் விழுந்து இறந்ததாகக் கூறி சிறுவனின் உறவினர்கள் பிரச்னை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் காவல் துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வடமாநில தொழிலாளர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.