கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மயக்க ஊசியில் இருந்து தப்பித்து வனத்துறையினக்கு போக்கு காட்டி வரும் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி 10 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பாகுபலி என்றழைக்கபடும் ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு நுழையும் அந்த யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவியினை பொருத்த வனத்துறை முயற்சித்து வருகிறது. பாகுபலி யானையை மடக்க மூன்று கும்கி யானைகளும் கொண்டுவரப்பட்டன.
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையை ஒட்டியுள்ள புதர் காட்டினுள் பாகுபலி யானை தென்பட்டதை அடுத்து, துப்பாக்கி மூலம் அதற்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மயக்க ஊசியில் இருந்து தப்பிய யானை நீலகிரி மலை மீது ஏறி வருகிறது. இதனால் யானையை அதன் போக்கில் விட்டு அடுத்த 10 நாட்களுக்கு ரேடியோ காலர் பொருத்தும் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாக கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.