கோவையில் முக பிளீச்சிங் செய்ய சலூன் சென்ற பள்ளிச் சிறுவனின் முகம் நீராவி பட்டு சிதைந்த விவகாரம் தொடர்பாக சலூன் கடை நடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பீகார் மாநிலம் மாத்வானியை சேர்ந்தவர் 22 வயதான வித்யானந்தன். இவரும் இவரது உறவினரான 32 வயதான சஞ்சய் தாஸ், பால் கம்பெனி பகுதியில் 'ராக் மென்ஸ்பியூட்டி சலூன்" என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வருகின்றனர். இந்த சலூனுக்கு ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் கடந்த 13 ஆம் தேதி இரவு முகம் பிளீச்சிங் செய்ய சென்றுள்ளான். அங்கு நீராவியை பயன்படுத்தி சிறுவனை ஆவி பிடிக்கச் செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் முகத்தில் கொதிநீர் பட்டதில் தீக்காயம் ஏற்பட்டு முகச் சிதைவு ஏற்பட்டது. இதனையடுத்து சிறுவனின் தந்தை விஜயகுமார், சலூன் கடை நடத்தி அஜாக்கிரதையாக செயல்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரு தரப்பையும் விசாரித்த காவல்துறையினர் 10 நாட்கள் சலூனை மூடி வைக்கவும், சிறுவனுக்கு சிகிச்சைக்கான செலவை ஏற்கவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் நிகழ்ந்த அடுத்த தினமே வடமாநில இளைஞர்கள் சலூன் கடையை வழக்கம்போல திறந்து விட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த சிறுவனின் தந்தை மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். ஆர் எஸ் புரம் காவல் துறையினரின் மெத்தனப் போக்கை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்த மனுவில் கோரி இருந்தார். இந்த நிலையில் சலுான் ஊழியர்களான வித்யானந்தன், சஞ்சய் தாஸ் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம், 337ன்படி வழக்கு பதிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர் . பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.