பொதுமக்களை குறிவைக்கும் செல்போன் திருடர்கள்: எப்படி நடக்கிறது இந்த பிசினஸ்?

பொதுமக்களை குறிவைக்கும் செல்போன் திருடர்கள்: எப்படி நடக்கிறது இந்த பிசினஸ்?
பொதுமக்களை குறிவைக்கும் செல்போன் திருடர்கள்: எப்படி நடக்கிறது இந்த பிசினஸ்?
Published on

சென்னையில் செல்போன் பறிப்பு என்பது வழக்கமான செயலாக நடந்து வருகிறது. சென்னை முழுவதும் கேமராக்கள் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டாலும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகவே நடக்கின்றன. இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை செல்போன் பறிப்பு தொடர்பாக கள ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

அதன்படி செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யார்? பறிக்கப்படும் செல்போன்கள் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன? செல்போன் பறிப்பு கும்பலின் நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது? உள்ளிட்ட பல தகவல்களை வழங்கியுள்ளது.

ஆரஞ்சு கலர் வேட்டி, சட்டை, நெற்றியில் பட்டை, காட்டன் பை இதுதான் தனபாலின் அடையாளம். தனபால் செல்போன் பறிப்பு கும்பலின் ஒரு டீலர். தனது அன்றாட வாழ்க்கையை ஒரு சாமியார் போல தொடங்குகிறார் தனபால். செல்போன் பறிப்பு கும்பலிடம் தனபால் குறிப்பு மொழிகளுடனே பேசிக்கொள்கிறார். எங்கு செல்போன் கிடைக்கும்? திருடிய செல்போனை எங்கு கொண்டு கொடுக்க வேண்டும் என்பது தனபாலுக்கு அத்துப்படி.

அப்படி தனபால் ஒரு செல்போன் திருடனை பர்மா பஜாரில் உள்ள ஒரு கடைக்கு அனுப்பி வைக்கிறார். பர்மா பஜார், ரிச்சி தெரு, தி நகர் உள்ளிட்ட பல இடங்களில் திருடப்படும் செல்போன்களை வாங்க பல டீலர்கள் உள்ளனர். அப்படியான டீலர்களில் ஒருவர் தான் தனபாலும் கூட. 

செல்போன் பறிப்பு குறித்து பேசிய தனபால், திருடிய போன்களை டீலர்கள் வாங்குவார்கள். அதன் லாக்கை எடுத்து செல்போனை தொடர்புகொள்ள முடியாதது போல செய்வார்கள். இது தான் முதல் வேலை. சிலர் ஐஎம்இஐ எண்ணைக்கூட மாற்றுவார்கள். ஆனால் அதற்கு செலவாகும். ஐ போனை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால் அதனை முழு போனாக பயன்படுத்த முடியாது. 

ஆனால் அதனை பிரித்து பாகங்களாக பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு ரிச்சி தெரு, பர்மா பஜாருக்கு மட்டும் 350 மேற்பட்ட செல்போன்கள் வரும் என்று தெரிவித்தார். மேலும் எங்களுக்கு போலீசில் கூட சிலர் தகவல்கள் தருவார்கள். அதன் மூலம் முக்கிய சோதனைகளில் இருந்து தப்பித்துக் கொள்வோம். 

காருக்காக காத்திருப்பவர்கள், வயதானவர்கள், சாலையில் செல்போனை பயன்படுத்திக்கொண்டு செல்பவர்கள் ஆகியவர்களே எங்களது குறி. சில நேரங்களில் செல்போன்கள் கைமாறி வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். திருடப்படும் செல்போனுக்கு தமிழ்நாட்டை விடவும் வேறு மாநிலங்களில் நல்ல விலை கிடைக்கும். செல்போன் பறிப்பவர்கள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க இந்தத் தொழிலை செய்வதில்லை. மதுக்குடிக்கவும், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வாங்கவும் தான் இந்தத் திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

செல்போன் பறிப்பு சம்பவங்கள் குறித்து பேசிய போலீசார், மாதத்துக்கு 200க்கும் மேற்பட்ட செல்போன்களை பின் தொடர்கிறோம். பலர் செல்போனுக்காக காவல்நிலையத்தை அணுகுவது இல்லை. சில நேரங்களில் பிடிபடும் செல்போன் டீலர்கள் மூலம் அவருடன் தொடர்பில் உள்ள பலரையும் பிடித்துவிடுவோம் என்று தெரிவித்தார். 

புள்ளி விவரங்கள்:

  • நவம்பர் வரையிலும் 1580 செல்போன் பறிப்பு புகார்கள் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • மாதத்துக்கு 110 முதல் 130 வரையிலான செல்போன் பறிப்பு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • ஒரு நாளைக்கு 3 முதல் 5 புகார்கள் வருகின்றது.
  • செல்போன் பறிப்பு தொடர்பாக இந்த வருடத்தில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 15 பேர் கல்லூரி மாணவர்கள்.

குறிப்பு வார்த்தைகள்:

  • டப்பி - செல்போன்
  • தக்கோ - திருடன்
  • தடி - போலீசார்
  • அட்டி - திருடர்கள் சந்திக்கும் இடம்

நாம் என்ன செய்ய வேண்டும்:

  • நமது ஐஎம்இஐ நம்பரை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இணையத்தில் இருந்து செல்போனை கட்டுப்படுத்தும் பல செயலிகள் உள்ளன. அவற்றை நமது செல்போனில் பதிவேற்றம் செய்து செல்போனை கட்டுப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.
  • சாலைகளில் செல்போனை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். தேவை எனில் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு பயன்படுத்த வேண்டும்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com