கஜா புயல் தாக்கம் ! தேங்காய் விலை உயரும்

கஜா புயல் தாக்கம் ! தேங்காய் விலை உயரும்

கஜா புயல் தாக்கம் ! தேங்காய் விலை உயரும்
Published on

கஜா புயலின் தாக்கத்தால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இந்த கஜா புயலால் தஞ்சை உள்ளிட்ட  மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் வாழ்வாதாரமாக விளங்கிய தென்னை மரங்கள் சீரழிந்து கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது இருக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தப்பகுதிகளில் இருந்து தேங்காய்கள் மற்றும் தென்னை மரங்கள் சார்ந்த பொருட்கள் அனுப்பப்படுகின்றன. 

இந்நிலையில் கஜா புயலால் தென்னை மரங்கள் சாய்ந்துள்ள நிலையில் தஞ்சாவூர் பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் தேங்காய் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 5 நாட்களில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தேங்காயின் விலை 26 ரூபாயிலிருந்து 32 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் தேங்காய் விளைச்சலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையேற்றம் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேங்காய் மட்டுமின்றி தென்னை மரங்களில் இருந்து உருவாக்கப்படும் தேங்காய் எண்ணெய், கொப்பறை உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்களின் விலையும் அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர் விவசாயிகள்.

தென்னிந்திய உணவுகளில் முக்கிய இடம் பிடித்துள்ள தேங்காயின் விலை ஏற்கனவே அதிகரித்து வந்த நிலையில் தற்போது கஜா புயல், விலை உயர்வின் வீச்சை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com