கிளாம்பாக்கம் பேருந்து நிலைய டெண்டர் தொடர்பான ரகசிய தகவல்கள் திருட்டு.. போலீஸில் புகாரளித்த CMDA!

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய டெண்டர் தொடர்பான ரகசிய தகவல்கள் திருடப்பட்டதாக பெருநகர வளர்ச்சிக்குழு அலுவலகத்தினர், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கிளாம்பாக்கம்
கிளாம்பாக்கம்pt
Published on

செய்தியாளர் - ஜெ.அன்பரசன்

சென்னையில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கட்டுமானங்கள் மற்றும் அதுதொடர்பான டெண்டர்கள் அனைத்தும் கோயம்பேட்டில் அமைந்துள்ள பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் (CMDA) வைத்துதான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்காகவும் திறந்து வைக்கப்பட்டது. இந்த கிளம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானத்தை பிவிஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமே டெண்டர் எடுத்து கட்டி முடித்தது.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய டெண்டர் தொடர்பான ரகசிய விவரங்களை, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்திற்கு சி.எம்.டி.ஏ அலுவலகம் மெயில் மூலம் அனுப்பியுள்ளது. ஆனால், அதே மெயிலானது சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியான டெண்டர் தொடர்பான ஆவணங்களை பார்த்து சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிளாம்பாக்கம்
விவசாயி மகன் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்.. யார் இந்த செல்வப் பெருந்தகை?

இது தொடர்பாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை நடத்தினர். “இவ்விவகாரத்தில் CMDA காண்டிராக்ட்டில் பணியாற்றும் தொழில் நுட்ப உதவியாளர்கள் பிரவீன் குமார் மற்றும் விவேக் ஆகியோர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது” என கோயம்பேடு காவல் நிலையத்தில் CMDA துணை பொறியாளர் பாலமுருகன் புகார் அளித்துள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகளை வேறொரு மெயிலுக்கு அனுப்பி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோயம்பேடு பேருந்து நிலைய வளாக காவல் நிலைய போலீசார் CSR கொடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுவதற்கு CMDA ஒப்பந்தம் விட்ட தகவல்களை திருடியது யார்? யாருக்கு அனுப்பப்பட்டது? அல்லது சி.எம்.டி.ஏ மெயில் ஹேக் செய்யப்பட்டதா? என கோயம்பேடு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலைய டெண்டர் தொடர்பான விவரங்கள் திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com