திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 33 தீர்மானங்களை முன்மொழிந்தார்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்... “சமூக நீதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும் அமைக்க வேண்டும் என்பதற்காக சகோதரர் திருமாவளவன் இந்த வெல்லும் ஜனநாயகம் மாநாட்டை கூட்டியுள்ளார். வெல்லும் ஜனநாயகம் என்று சொன்னால் மட்டும் போதாது. நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும்.
தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம். தமிழ்நாட்டில் பாஜகவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்தினால் போதாது.. அகில இந்திய அளவில் வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் I.N.D.I.A கூட்டணி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்., இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பு இருக்காது, ஜனநாயக அமைப்பு முறை இருக்காது, நாடாளுமன்ற நடைமுறை இருக்காது, ஏன், மாநிலங்களே இருக்காது. இதை எல்லோரும் உணர வேண்டும். மாநிலங்களை கார்ப்பரேசன்களாக ஆக்கிவிடுவார்கள்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், “தமிழ்நாடு வட இந்திய மாநிலங்களைப் போல் அல்ல. இது சிறுத்தைகளின் மாநிலம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமங்களிலும் சிறுத்தைகள் இருக்கிறார்கள். ஆட்டுக் குட்டிகள் இங்கு வந்து பார்த்தால் தெரியும். உங்கள் செலவில் உங்கள் உழைப்பில் நீங்கள் இந்த மாநாட்டிற்கு திரண்டு வந்துள்ளீர்கள். ஒரு பைசா கூட நான் உங்களுக்கு கொடுக்கவில்லை. இந்த மாநாட்டுச் செலவை நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் என்று யோசித்தேன். ஆனால் நீங்கள் எனக்கு நிதி வழங்கியுள்ளீர்கள். மோடியை ஆட்சி அதிகார பீடத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். இனி ஒருபோதும் தாமதிக்க, வேடிக்கை பார்க்க முடியாது.
இது தேர்தல் அரசியல் கணக்கல்ல. நாட்டையும் நாட்டு மக்களையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும். இந்த மாநாட்டின் விழா நாயகன் அரசமைப்பு சட்டம்தான். இந்திய வரலாற்றிலேயே ஜனநாயக சுடரை ஏந்துகிற மாநாடு விடுதலை சிறுத்தைகளின் மாநாடுதான். சாதியின், மதத்தின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கிற மோசடிக் கும்பலின் கைகளில் இந்த நாடு சிக்கிக்கொண்டது. மோடி மக்களை ஏய்க்கிறார். அவரால் இதை சாதித்தேன், அதை சாதித்தேன், இந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்துனோம் என சொல்ல முடியுமா. மோடி, அமித்ஷா ஆகியோரின் சேவை அம்பானிக்கும் அதானிக்கும் எடுபடி வேலை செய்வதுதான்.
ஓபிசி மக்களை ஏய்த்து ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், அதைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்காகதான் ராமர் பெயரை சொல்லுகிறார்கள், ஜெய்ஸ்ரீ ராம் முழங்குகிறார்கள், ராமர் கோவிலை கட்டி முடிப்பதற்கு முன்னே திறக்கிறார்கள். இவையெல்லாம் திசைதிருப்புகிற சதித்திட்டம்” என தெரிவித்தார்.