கலைவாணர் அரங்கத்தில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அம்மா மினி கிளினிக் மூடல், அம்மா சிமெண்ட் பெயர் மாற்றம் குறித்து பேசினார்.
அம்மா மினி கிளினிக் மூடப்பட்டது, அரசியல் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “எந்தவித கட்டமைப்புமில்லாமல், மருத்துவர்கள் இல்லாமல் அம்மா கிளினிக் என்று திறந்திருக்கின்றீர்கள். சொல்லப்போனால் பல இடங்களில் கழிவறைகளை சரிசெய்து கிளினிக் நடத்தினார்கள். இதுபோன்ற காரணங்களால்தான் தற்போது அது மூடப்படுகிறது. மற்றபடி இதன் பின்னணியில் பழிவாங்கும் நடவடிக்கை ஏதும் இல்லை. இவ்விஷயத்தில், அரசு கொள்கை முடிவு எடுத்து வேண்டாம் என முடிவு செய்துள்ளோம்” என கூறினார்.
இதைத்தொடர்ந்து அம்மா சிமெண்ட் குறித்து எதிர்கட்சி தலைவர் மற்றும் தங்கம் தென்னரசு இடையே வாதம் நடைபெற்று வருகிறது. இவ்விஷயத்தில், ‘கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
நகைக்கடன் குறித்து பேசப்பட்டபோது, “35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி என அரசு முன்பு சொல்லியுள்ளது” என எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளிக்கையில், “தற்போது கூட்டுறவு வங்கிகளில் 5சவரணுக்கு கீழ் நகைக்கடன் பெற்ற 13,40,000 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.