நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இக்கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாக்கல் செய்தது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கனிமொழிக்கும் நான் ஒரு நிகழ்வை நினைவுகூற விரும்புகிறேன். புனிதமான தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 25, 1989-ல் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை நினைவுகூற விரும்புகிறேன்.
அன்றைய தினம் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் சேலை அங்கிருந்தவர்களால் இழுக்கப்பட்டது. அப்போது அதை பார்த்துக்கொண்டிருந்த திமுக உறுப்பினர்கள், அவரைப்பார்த்து சிரித்தனர்... நகைத்தனர்! அப்படியான நீங்கள், இன்று கௌரவர் சபா பற்றி பேசுகிறீர்கள்?! நீங்கள் திரௌபதி பற்றி பேசுகிறீர்கள்?! திமுக, ஜெயலலிதாவை மறந்துவிட்டதா? நீங்கள்தானே ஜெயலலிதாவை அவமதித்தீர்கள்.
அந்த நாளில்தான் ஜெயலலிதா ‘இனி நான் முதல்வராகாமல் அவைக்கு வரமாட்டேன்’ எனக்கூறி சென்றார். சொன்னபடியே செய்தார். அன்று ஜெயலலிதாவை பேசியவர்கள், இன்று திரௌபதி பற்றி பேசுவது, அதிர்ச்சியாக இருக்கிறது. கனிமொழி நேற்று பேசுகையில், ‘அன்று திரௌபதியை காக்க கிருஷ்ணர் வந்தார். அப்போது கிருஷ்ணர் ‘இங்கு அமைதி காத்த அனைவருக்கும் தண்டனை கிடைக்குமென்றார்’ எனக்கூறினார். எனில் அன்று தமிழக சட்டப்பேரவையில் அமைதிகாத்தவர்கள் யார்? திமுக உறுப்பினர்களில்லையா? அவர்களுக்கு தண்டனை கிடைக்காதா?” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து கூறியிருப்பதாவது, “ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக்கொண்ட நாடகம். அதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும் அப்போது தான் உடன் இருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் சட்டமன்றத்தில் பேசி அதுவும் அவைக்குறிப்பிலே உள்ளது.
எனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வை பொய்யாக திரித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது. அவையை தவறாக வழிநடத்துவது” என்று சொல்லியுள்ளார். இதுகுறித்த முழு காணொளியும் கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் உள்ளது.