மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் குரோம்பேட்டை இல்லத்திலும் பின்னர் தி.நகர் கட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சளி மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (15.11.2023) காலை 9.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரகவும் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றியவர்.
தியாகி சங்கரய்யாவின் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சங்கரய்யாவிற்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முனைவர் பட்டம் வழங்கப்படாததற்கு குறுகிய மனம் படைத்தவர்களின் சதியே காரணம் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
சங்கரய்யா மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த தகைசால் தமிழர் – முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்குச் செவ்வணக்கம்!
தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.