மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வுசெய்தார். ஆய்வு செய்தபின், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், ‘’மக்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை; மக்கள் திருப்தியாக உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதற்கட்டமாக 3 அமைச்சர்களை அனுப்பிவைத்தேன்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை நானும் நேரில் ஆய்வு செய்தேன்; பணிகள் திருப்தியாக உள்ளன. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்; அவர்களுக்கு சில குறைகள் இருக்கின்றன; அவை விரைவில் தீர்க்கப்படும். அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் எதையாவது கூறுவது பற்றி கவலையில்லை. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்றவாறு கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பயிர்கள் பற்றிய கணக்கெடுப்பு முடிந்தபின் நிவாரணத்தொகை வழங்கப்படும்’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு முன்னெடுப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1000 வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.