சேலம் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவர் தனுஷ் இன்று நீட் தேர்வு நடைபெறவிருந்த நிலையில் அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.
தற்போது, மாணவரின் இறப்பு இரங்கல் தெரிவித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், சேலம் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்திருக்கிறார். இரண்டுமுறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறமுடியாத அளவிற்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு மிகவும் கடினமானதாக இருக்கிறது என்றும், நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களை புரிந்துகொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வரவேண்டிய மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டம் தொடங்குகிறது என்றும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப்பெற நாளை சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுகிறோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மேலும், மாணவர்கள் மனம் தளரவேண்டாம் என்றும், விபரீத முடிவுகளை எடுக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.