அனைத்துக்கட்சி கூட்ட தீர்மானத்தின்படி சட்டமன்ற சிறப்புக்கூட்டம் இன்று நடைபெற்றது. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. 142 நாட்களுக்குப்பின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 1ஆம் தேதி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார். அதற்கு, கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்தது அல்ல என சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் நீட் தேர்வுக்கு எதிரான தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு மசோதா மீதான விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘’கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்ட, கல்வி உரிமையை மீட்டெடுக்க இன்று நாம் கூடியுள்ளோம். எனது பொதுவாழ்வில் மறக்கமுடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுகு மருத்துவக்கல்வியில் 7.5% இட ஒதுக்கீட்டை இந்த சட்டமன்றம்தான் உறுதி செய்துள்ளது. 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி சட்டப் பாதுகாப்பை பெற்றது இந்த சட்டமன்றம்தான். நுழைவுத்தேர்வு ஒழிப்புச்சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றது இந்த சட்டமன்றம்தான்.
நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்டமன்றத்தால்தான் முடியும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நீதியை நிலைநாட்டிட இந்த சட்டமன்றத்தில் கூடியுள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தால் உருவானதல்ல நீட் தேர்வு. நீட் தேர்வு விலக்கிற்காக மட்டுமல்ல; இந்த சட்டமன்றத்தின் இறையாண்மையை காக்க, சமூக நீதியை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவுக்கு தடுப்புச்சுவர் போடுகிறது. நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சிமையங்களுக்கு சாதகமானது. 2019இல் 4 பேர், 2020இல் 5 பேர், 2021இல் 15 பேர் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மத்திய அரசே கூறியுள்ளது. நீட் தேர்வில் வெற்றிபெற ஆள் மாறாட்ட நிகழ்வுகள்கூட நடந்துள்ளன. தேர்வர்களூக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவுதல் உள்ளிட்ட முறைகேடுகள் நீட் தேர்வில் வழக்கமான நடைமுறையாக மாறியுள்ளது. தேர்வு எழுத மாற்று நபர்களை பயன்படுத்துவது, நீட் மதிப்பெண்களில் திருத்தம் உள்ளிட்ட நீட் தேர்வு மோசடிகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
நீட் தேர்வு என்பது மாணவர்களை கொல்லக்கூடியது; அது நீட் தேர்வு அல்ல; பலிபீடம். ஏழை, எளிய மாணவர்களை ஓரங்கட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட தேர்வே நீட் தேர்வு. மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைக்கும் நீட் தேர்வு என்பது ஒரு பலிபீடம் போன்றது. சில மாணவர்களை கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? நீட் விலக்கு மசோதாவை திருப்பியனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் சரியானவை அல்ல. சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கருத்துக்கள் கேட்டபிறகே ஏ.கே.ராஜன் குழு அறிக்கை அளித்துள்ளது.
நீட் தேர்வுக்கு முன் 90% இடங்களை மாநில பாடத்திட்ட மாணவர்கள் பெற்றுவந்தனர். தகுதி என்ற போர்வையில் உள்ள நீட் தேர்வு என்ற அறிவுத் தீண்டாமையை நாம் அகற்றவேண்டாமா? நீட் தேர்வு என்பது பணக்கார நீதியை பேசுகிறது; அரசியலமைப்பு என்பதே சட்டத்தின் நீதியை பேசுகிறது. அரசியலமைப்புச்சட்டம் கூறக்கூடிய சமத்துவத்திற்கு எதிரானது நீட் தேர்வு. மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியதன் மூலம் சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறியாகியுள்ளது. சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஆளுநர் நிறுத்திவைக்க முடியுமென்றால் இந்திய மாநிலங்களின் கதி என்ன? நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் மசோதாவை மதிக்காமல் திருப்பி அனுப்பியது மக்களாட்சிக்கு எதிரானது. ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டே நடந்துகொள்ள வேண்டும்.
சமூக நீதி மட்டுமல்ல; மாநில சுயாட்சியும் திராவிட இயக்கத்தின் கொள்கைதான். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என இதே சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. நாடாளுமன்றத்துடன் முரண்படக்கூடிய சட்டத்தை நிறைவேற்றினல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கலாம். மீண்டும் நிறைவேற்றப்படும் நீட் விலக்கு மசோதாவை தாமதிக்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவார் என நம்புகிறேன். நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதன்மூலம் இந்தியாவுக்கே ஒளி விளக்கை ஏற்றிவைக்கிறோம்’’ என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்றே இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.