“உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு, அரசு மரியாதையுடன் நடக்கும்” முதல்வர் ஸ்டாலின்!

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு pt web
Published on

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 13 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் உடல் உறுப்பு தான தினத்தை ஒட்டி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த முதலமைச்சர், “உடலுறுப்பு தானம் என்பது தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பரந்த மனதுடைய மக்களும், மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பும் இங்கு இருப்பதால்தான் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளோம்.

தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்!” என்றும் குறிப்பிட்டிருந்தார். 2009 ஆம் ஆண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்து கையொப்பமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com