சென்னைக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள சூழலில், அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளிலேயே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெடுப்புகள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
24 மணி நேரம் சுழற்சி முறையில் மாநகராட்சி ஊழியர்கள் 21,000க்கும் மேற்பட்டோர் களத்திலிருந்து பணி செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, நிவாரண முகாம்களில் மக்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவது என்று தமிழக அரசு முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்தவகையில் மழையால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், அம்மா உணவுகளில் இன்றும் நாளையும் உணவு இலவசம் என்ற அறிவிப்பினை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.