செய்தியாளர் - பிரவீன்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என திமுகவின் முப்பெரும் விழா, கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “அரசியலமைப்பு சாசனத்தை மாற்ற நினைத்தவர்களை, அதன் முன் மண்டியிடச் செய்தவர்கள் இந்திய மக்கள்” என பெருமிதம் தெரிவித்தார்.
பின் ‘தமிழக எம்.பி.க்கள் 40 பேர் நாடாளுமன்றத்தில் என்ன செய்யப் போகிறார்கள்?’ என கேள்வி எழுப்பியவர்களுக்கு பொறுத்திருந்து பாருங்கள் (Wait and See) என முதலமைச்சர் ஆங்கிலத்தில் பதிலளித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை, புரட்சியாளர் அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்தின் முன் தலைகுனிய வைத்துள்ளோம். தலைவர் கலைஞர் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், இது I.N.D.I.A. கூட்டணியின் 41 ஆவது வெற்றி.
இப்போதுகூட தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு போய் என்ன செய்ய போகிறார்கள் என்று சில அதிமேதாவிகள் கேட்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே அதிமேதாவிகள் என நினைத்துக் கொள்கிறார்கள். 40 பேரும் கேண்டீனில் வடை சாப்பிட போகிறார்கள் என சிலர் கேட்கிறார்கள். வாயால் வடை சுடுவது உங்களது வேலை. எங்களது எம்பிக்கள் கருத்துக்களால் உங்களது ஆணவத்தை சுடுவார்கள். Wait and See" என தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், தமிழ்நாட்டில் INDIA கூட்டணி இன்னும் 25ஆண்டுகளுக்கு நீடிக்கும் என கூறினார். விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் மதவாத, சாதியவாத அரசியல் எடுபடாது என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், கூட்டணி இல்லை எனக் கூறிவிட்டு பாஜகவுக்காக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என விமர்சித்தார்.
28 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவை மக்களவைத் தொகுதி, திமுகவசம் வந்ததன் காரணமாகவும், மேற்கு மண்டலத்தில் திமுக வலிமையாக இருக்கிறது என்பதை காட்டும் விதமாகவும், கோவையில் இந்த பிரமாண்ட விழா நடத்தப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.