முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழகத்தில் தொழில்தொடங்கும் நிறுவனங்களுக்கான புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்பக் கொள்கை 2018-ஐ முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.
செயல்திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன அதிகாரிகள், பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.
அதில், கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஓசூரில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், ஊரகப் பகுதிகளில் புதிதாக தொழில் தொடங்கி அதிகமான வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு அரசு சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அதிக அளவிலான ஊக்கத் தொகை, மானியம் வழங்கப்படும், வேலை வாய்ப்பு பெறும் தொழிலாளர்களுக்கு இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 100 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் ஊக்கத்தொகை பெற தகுதியானவை என்றும் கூறப்பட்டுள்ளது.