திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்வர் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறக்கூடிய அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இதையடுத்து பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் முதலமைச்சர் பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சென்னை புறப்பட்டார்.
தமிழக சட்டப் பேரவையில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க கூடிய நிலை ஏற்படும் என்று இருந்த நிலையில் நடைபெற்ற இடைதேர்தலில் அதிமுக 9 இடத்தில் வெற்றி பெற்றது. இதனால் சட்டப்பேரவையில் தற்போது அதிமுகவிற்கு 122 இடங்களுடம் பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசுக்கு இருந்த பெரும்பான்மை குறைவிற்கான சிக்கல் இடைதேர்தல் முடிவால் தீர்வு அடைந்துள்ளது. இதையடுத்து ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் இன்று சாமி தரிசனம் செய்து உள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.