“கொதிச்சுபோய் கோபமடைந்த கவர்னர் என்ன சொன்னார் தெரியுமா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"ஆளும் கட்சியில் இருக்கும்போது இந்த அறப்போர் நடத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. நீட் இல்லாதபோது மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்களை வைத்து மருத்துவராகும் வாய்ப்பு இருந்தது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் திமுக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஆளும் கட்சியில் இருக்கும்போது இந்த அறப்போர் நடத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. நீட் இல்லாதபோது ஏழை மக்கள், நடுத்தர, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்களை வைத்து மருத்துவராகும் வாய்ப்பு இருந்தது. இன்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவராகலாம் என்ற நிலை வந்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வை திமுக எதிர்த்து வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிரான திமுக உண்ணாவிரதம்
நீட் தேர்வுக்கு எதிரான திமுக உண்ணாவிரதம்புதிய தலைமுறை

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கூட நீட் தேர்வுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டை மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து டெல்லிக்கு செல்கிறது. அந்த தீர்மானம் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. அதை ஆளும் கட்சியான அதிமுக வெளியில் சொல்லவில்லை. ஓராண்டுகாலம் சொல்லாமல் இருந்த காலத்தினால் செல்லுபடியாகாத நிலைக்கு அந்த மசோதா சென்றுவிட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் அந்த தீர்மானத்தை கொண்டுவந்தோம். இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவும் ஆதரித்தது. அந்த தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின்கோப்பு படம்

ஆளுநர் தீர்மானத்தை அனுப்பாமல் ராஜ்பவனிலேயே வைத்திருந்தார். அதை மீண்டும் வலுயுறுத்திய பின் சட்டமன்றத்திற்கு ஆளுநர் அதை திருப்பி அனுப்புகிறார். சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லி மீண்டும் அனுப்பி வைக்கிறோம். அதன் பின் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது மசோதா குடியரசுத் தலைவரிடம் உள்ளது. அதை முடிவு செய்ய வேண்டியது ஒன்றியத்தில் இருக்கக்கூடிய குடியரசுத் தலைவர்தான்.

ஆனால் சில தினங்களுக்கு முன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடலை ஆளுநர் நடத்தியுள்ளார். அந்தக் கூட்டத்தில் சேலம் உருக்காலையில் பணியாற்றும் ஒரு தோழரின் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் அந்த தோழரும் கலந்து கொண்டார். மத்திய அரசின் ஊழியரான அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாக, என் மகன் தேர்வாகிவிட்டான்.. ஆனால் சில மாணவர்கள் வெற்றி பெற முடியாத சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது நிலை என்னவாகும். நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என கேட்டபோது, கொதிச்சுபோய் கோபமடைந்த கவர்னர் என்ன சொன்னார் தெரியுமா? அதெல்லாம் முடியாது என்கிறார். இதையெல்லாம் கண்டித்துதான் தமிழ்நாடு முழுவதும் திமுகவின் துணை அமைப்புகள் தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு போராட்டத்தை நடத்துகிறார்கள். நீட் விலக்கு பெறும் வரை திமுக ஓயாது” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com