மிக்ஜாம் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 2 ஆவது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதால் சாலைகள் வெள்ளம் போல் காட்சியளிக்கின்றன. சென்னை நகரமே மழைநீரில் தத்தளிக்கிறது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் இன்று காலை 8.30 முதல் மதியம் 2.30 வரை முடிந்த 6 மணி நேரத்திற்குள் சராசரியாக சுமார் 12 செ.மீ. அளவிற்கு அதி கனமழை பெய்துள்ளது. இந்தப் பெருமழை இன்று இரவு வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சவாலான இந்தப் பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர்கொண்டு உதவிகள் செய்வோம்
தமிழ்நாடு அரசு திட்டமிட்டு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, தயார் நிலையில் இருந்த பல்வேறு அரசுத் துறைகளின் பணியாளர்கள் மற்றும் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய செயல்பாட்டின் காரணமாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இத்தருணத்தில் என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிகச் சவாலான நேரத்தில் மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து இந்த மாபெரும் பணியில் தங்களை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.