”இலவச பஸ் சேவையால் வருமானம் வராதுனு தெரிஞ்சுதான்..” - பட்டியலை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின்!
திமுக ஆட்சிக்கு வரும் முன்பு திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய வேண்டியவற்றை திட்டமிடுவதற்கான கூட்டமாக அது அமைந்தது என அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ஏற்றமிகு ஏழு திட்டங்கள் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, “தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது மகளிர் இலவச பயணம் திட்டத்தை அறிவித்தால் அரசுக்கு வருமானம் குறையும் என்றார்கள். ஆனால், பெண்கள் வாழ்வில் இதன் மூலம் மலர்ச்சி ஏற்படும் என்று கூறினேன். முதலமைச்சராக பதவியேற்று முதல் கையெழுத்தாக அது அமைந்தது. இதுவரை 236 கோடி முறை பெண்கள் இலவச பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் பெண்கள் பொருளாதார தன்னிறைவு அடைந்து, அவர்களின் சமூகப் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு நல்ல பெயரும் புகழும் கிடைக்க காரணமாக இருந்துள்ளது.
நான் முதல்வன் திட்டம்:
மாணவர்களின் கல்வி, அறிவு, சிந்தனை மற்றும் பன்முகத் திறனை மேம்படுத்த கடந்த ஆண்டு மார்ச்சில் தொடங்கப்பட்டு 1300-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலைக் கல்லூரியில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை பயிற்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர்களை உலகில் முதன்மையானவர்களாக்க அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம்.
ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. ரூ.2,500 கோடி மதிப்புக்கு மேல் ஊரக குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு வேளாண் பரப்பு அதிகரித்துள்ளது.
நாளை (மார்ச் 1) எனது 70வது பிறந்தநாள், 55 ஆண்டுகள் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருந்தேன். தமிழகத்தின் அனைத்து குடும்பங்களையும் எனது குடும்பமாக கருதுகிறேன். எனக்கான இலக்குகளை நானே தீர்மானித்து உழைத்து வருகிறேன்.
மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றுவதை தடுக்க DACCI அமைப்புடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பை மேம்படுத்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. நவீன இயந்திரங்கள் மூலம் பாதாள சாக்கடை கழிவுகள் அகற்றப்பட உள்ளன. தூய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோராக மாற்றப்படுவர். தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கருவிகள், வாகனங்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். விரைவில் அனைத்து நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
தமிழ்நாட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடுடன் போதுமான எடை, உயரமின்றி இருக்கின்றனர். 35 லட்சம் குழந்தைகளை பரிசோதித்துள்ளோம். பள்ளிகளில் வாரத்திற்கு மூன்று முட்டைகள், பிஸ்கட்கள் வழங்குவதன் மூலம் அனைத்து குழந்தைகளும் சத்துள்ள குழந்தைகளாக வருவர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
1-5 வகுப்பில் பயிலும் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15 மாநகராட்சி, 23 நகராட்சியில் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் 593 பள்ளிகளில் 50,306 மாணவர்கள் உணவு உண்டு வருகின்றனர். இதற்காக 46 இடங்களில் உணவு சமைக்கப்படுகிறது. தற்போது 433 பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 58,096 பள்ளிகளில் இனி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் உணவு வழங்கப்படும். 1 லட்சத்து 6 ஆயிரத்து 44 மாணவர்களுக்கு இனி காலை உணவு வழங்கப்படும்.
கோட்டையில் நிறைவேற்றும் திட்டங்களை கடைக்கோடி மனிதர்களுக்கும் சென்று சேர வேண்டும், கடைக்கோடி மனிதர்களின் நன்மைக்காகவே திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறது. மாநிலங்கள் எல்லைகளால் உருவானது இல்லை. எண்ணங்களால் உருவானது. தற்போது திராவிட ஆட்சியில் ஏற்றமிகு மாநிலமாக தமிழ்நாடாக மாறி உள்ளது.” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் பேசியிருக்கிறார்.