“நம்பர் ஒன் முதல்வர் என்பதை விட நம்பர் ஒன் தமிழ்நாடு என்று அடைவது தான் பெருமை” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக நிர்வாகி அய்யாராசு இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
“நான் பொறுப்பேற்ற பணியாற்றும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. நான் திராவிட மாடல் ஆட்சியில் பொறுப்பை ஏற்றதும் கொரோனா தொற்று பிரச்னை இருந்தது. அதனை எதிர்கொண்டோம். கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சராக இல்லாமல், நான் உள்பட அனைவரும் அதற்கு எதிராக சுகாதார அமைச்சராக போராடி வெற்றி கண்டோம்.
அதன் பிறகு பெரு வெள்ளம். அதனை எதிர்கொண்டோம். தற்போது புயல். இந்த புயலை சந்திக்கும் திறமை திராவிட மாடல் ஆட்சிக்கு வந்துள்ளது. இதற்கு காரணம் கலைஞர் கருணாநிதி சொல்லிக்கொடுத்த உழைப்பு. இந்த புயலை சிறப்பாக கையாண்டதாக பார்ப்பவர்கள் எல்லோரும் கடந்த இரண்டு நாட்களாக பாராட்டி வருகிறார்கள். ஃபோனிலும் தொடர்பு கொண்டு வாழ்த்துகிறார்கள்.
என்னை நம்பர் ஒன் முதல்வர் என்று கூறுகிறார்கள். எனக்கு நம்பர் ஒன் முதல்வர் என்பதில் பெருமை இல்லை. நம்பர் ஒன் தமிழ்நாடு என்று வர வேண்டும். அது தான் பெருமை. அதனையும் சாதித்துக் காட்டுவேன். ஏன் என்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
மணமக்கள் அளவாக குழந்தைகளை பெற்றுக் கொள்வதுடன் குழந்தைகளுக்கு பெயரை தமிழில் வைக்க வேண்டும். இது சுயமரியாதை திருமணம் மட்டுமல்ல தமிழ் முறை திருமணம். ஆகவே செம்மொழியான தமிழில் பெயர் வைக்க வேண்டும். மணமக்கள் வீட்டிற்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டராய் வாழ வேண்டும்.” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.