மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக இயங்கிவருகின்றன. இதில் திமுக சார்பில், I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவு தருமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “I.N.D.I.A. கூட்டணி ஆட்சிதான் ஒன்றியத்தில் அமையும்.
நாட்டு மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட நமது கூட்டணி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எஞ்சியுள்ள கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்!
அரசு ஊழியர்களின் போராட்டத்தை எள்ளி நகையாடியதோடு, கஜானாவைச் சுரண்டிச் சென்ற கடந்தகால ஆட்சியாளர்களின் செயல் காரணமாக, சில வாக்குறுதிகள் தாமதாகி இருக்கிறதே ஒழிய, அவை நிராகரிக்கப்படவில்லை! சொன்னதைச் செய்வோம்! கலைஞரின் வழியில் அரசு ஊழியர்களின் காவலனாகத் தொடர்வோம்!
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும்போது எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும் என்று உறுதியளிக்கிறேன். திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும்.
ஆகவே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட நமது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றுள்ளார்.