“கல்வியில் தமிழ்நாடு சிறக்க, கலைஞரே காரணம்”- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
“தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும்” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் தற்போது மதுரையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களை கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் 120 கோடியே 75 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்தவைத்தார். திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஹெச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் ஹெச்.சி.எல் குழும தலைவர் ரோஷினி ஆகியோர் பங்கேற்றனர்.
நூலகத்தின் திறப்பு விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என சுமார் 70,000 பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர்கள் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், “கல்வியில் தமிழகம் சிறக்க கலைஞர் கருணாநிதியே காரணம். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார் அவர்.
சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றால், மதுரை தமிழ்நாட்டின் கலைநகர். சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் நூலகமும் கலைஞர் பெயரில் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டாலின் சொல்லாததையும் செய்வான் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும் மதுரையில் நூற்றாண்டு நூலகமும். நூலகத்தினால், தமிழ்நாட்டில் அறிவுத்தீ பரவப்போகிறது. சங்கம் வளர்த்த மதுரையில் நூலகம் திறக்காமல், வேறு எங்கு திறப்பது?
கல்வியும் சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள். தேர்தல் வாக்குறுதியில் இல்லாத நூலகம், மருத்துவமனையையும் நிறைவேற்றியுள்ளோம் நாங்கள்” என்றார்.