வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்தார்.
அதுமட்டுமின்றி ஸ்பெயின் தொழில்நிறுவனங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், ஸ்பெயின் பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், ஸ்பெயின் மக்களுக்கு நன்றி எனவும், தமிழ் மக்களின் நினைவுகள் பொக்கிஷமாக இருக்கும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இன்று காலை சென்னை திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஸ்பெயினிற்கு சென்ற நான் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து திரும்பி இருக்கிறேன். அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்தது. நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். பாஜக எதிர்க்கட்சி மாதிரியும், காங்கிரஸ் ஆளும் கட்சி மாதிரியும் அவர் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததில் இருந்து பேசிக்கொண்டு உள்ளார். இதுதான் புரியாத புதிராக உள்ளது.
400 இடங்களைக் கைப்பற்றுவோம் என பிரதமர் சொல்கிறார். மொத்தம் 543 இடங்கள் உள்ளது. அதையும் கைப்பற்றுவேன் என சொன்னாலும் ஆச்சர்யமில்லை” என தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது குறித்த கேள்விக்கு, ”மக்களுக்கு தொண்டாற்ற யார் அரசியலுக்கு வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறினார்.