வழக்கமாக அரசு நிகழ்வுகளை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முதல்வர், பாண்டி பஜார் சாலை திறப்பு விழா நிகழ்ச்சியை மணி அடித்து தொடங்கி வைத்தார்.
சென்னையின் மையப் பகுதிகளில் ஒன்று தி.நகரில் அமைந்துள்ள பாண்டி பஜார். பல்வேறு மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்க வரும் முக்கிய இடமாக இது விளங்கி வருகிறது. மையப் பகுதி என்றாலே அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கதானே செய்யும். ஆகவே இரவு நேரங்களில் கூட இந்தச் சாலை வாகன நெரிசல் மிகுந்த இடமாகவே இருந்து வந்தது.
அந்த நிலைமையை மாற்ற வேண்டி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை பாண்டி பஜாரை புதுப்பொலிவுடன் மாற்றும் திட்டம் பல மாதங்களாகவே நடந்து வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் பசுமை நிறைந்தப் பகுதியாகவும் மக்கள் நடை பாதை வழியே மிக இயல்பாக சிரமம் இன்றி நடந்து சென்று நினைத்த பொருட்களை வாங்கும்படியான வசதிகளை ஏற்படுத்தி தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இதற்காக சுமார் 40 கோடி ரூபாய் தொகை ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து வந்தன. மிக விசாலமான நடை பாதை, அழகான ஓவியங்கள், பார்க்கவே வியப்பை தரும் இருக்கைகள், திரும்பிய திசை எல்லாம் சிசிடிவிகள், நவீனமான குப்பைத் தொட்டிகள் என பாண்டி பஜார் புதிய தோற்றத்திற்கு உருமாற்றம் செய்யப்பட்டது.
இந்த வேலைகள் முடிவடைந்த நிலையில் இன்று மாலை நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட சாலைகளை திறந்து வைத்தார். வழக்கமாக கொடியசைத்து திறந்து வைக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு மாறாக மணி அடித்து இந்த விழாவை அவர் தொடங்கி வைத்தார்.
மொத்தம் ரூ.39.86 கோடி மதிப்பிலான நடைபாதை வளாகம், சாலை வசதிகளை அவர் பேட்டரி காரில் அமர்ந்து சென்று ஆய்வு செய்தார். 9.11 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட 23 சாலைகளையும் அவர் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது வித்தியாசமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கலைநிகழ்ச்சிகளை அவர் அங்கு பார்த்து ரசித்தார். அவருடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.